பிரளயக் காலத்திலும் அழியாது நீடித்திருந்ததால் 'நீடூர்' என்று அழைக்கப்பட்டது. முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாவது யுகத்தில் சூரிய, சந்திரனும், மூன்றாவது யுகத்தில் காளியும், நான்காவது யுகத்தில் நண்டும் இத்தலத்து இறைவனை பூசித்ததாகத் தலவரலாறு கூறுகிறது.
இத்தலத்து இறைவனை சந்திரன் வழிபட்டதால் மூலவர் 'அருட்சோமநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'கானநிர்த்தன சங்கரர்' என்றும் போற்றப்படுகின்றார். அம்பிகை 'வேயுறு தோளியம்மை' என்று வணங்கப்படுகிறார். சூரியனுக்கு அபயமளித்ததால் 'ஆதித்யா பயப்ரதாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்.
முனையடுவார் நாயனார் தொண்டு செய்து முக்தியடைந்த தலம்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவர் மீது சூரிய பூஜை நிகழ்கின்றது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
|